13/08/2026
பொது விநியோகத்தை அதானிக்கு தாரை வார்க்கும் பி.ஜே.பி. அரசு !
உணவுக்கான உரிமை" என்பது மாண்பமை உச்சநீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உள்ளடக்கியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அனைவருக்கும் குறிப்பாக ஏழை,எளிய மற்றும் விளிம்பு நிலை குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பினை வழங்குவதே பொதுவிநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு பொது விநியோக திட்டத்தை கைவிடும் நோக்கத்தில், நவீன மயமாக்கல், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ல் திருத்தம், இந்திய உணவுக் கழகத்தின் தானிய களஞ்சியங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, நியாய விலை கடைகளை தனியாருக்கு அனுமதிப்பது, பொது விநியோகத் திட்டத்திற்கான மானிய தொகையை வெட்டிச் சுருக்குவது என தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
உணவு உரிமை பறிப்பு-அந்தோதயா அன்ன யோஜனா திட்டம் சிதைப்பு
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் ஏழ்மையான ( Poorest of the Poor ) குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ உணவு தானியம் மானிய விலையில் 2002 ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தோதையா அன்னயோஜனா திட்டம் துவங்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியம் என உயர்த்தப்பட்டது. படிப்படியாக 2003,2004, 2005 ஆம் ஆண்டுகளில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதில் பயனாளிகளின் எண்ணிக்கையும் 2.5கோடியாக உயர்ந்தது. இதனால் விதவைகள் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், குணப்படுத்த முடியாத நோயாளிகள், ஆதரவற்ற முதியவர்கள்,நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், சிறுவிவசாயிகள், தெருவோர வியாபாரிகள், பழங்குடியினர் என பல பிரிவினர் பயனடைந்து வருகின்றனர்.
2013ஆம் ஆண்டில் உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிய பின் அந்தியோதயா அன்னயோஜனா (AAY)திட்டம் சட்டபூர்வ உரிமையாக மாற்றப்பட்டது. தற்போது குடும்ப அட்டை ஒன்றிற்கு மாதத்திற்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருவதை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட முறையிலிருந்து தனிநபர் அடிப்படையிலான முறையாக மாற்றுகின்றனர். இரண்டு பேர் கொண்ட குடும்பம் எனில் தலா 7 கிலோ வீதம் 14 கிலோ இலவச தானியம், ஐந்து அல்லது அதற்கு மேல் உறுப்பினர் கொண்ட குடும்பங்களுக்கு மாதம் அதிகபட்சமாக 35 கிலோ இலவச உணவு தானியம் என அளவீட்டை குறைக்கும் வகையில் ஒன்றிய பிஜேபி அரசு உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ல் திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
இதன் அடிப்படையில் உணவு தானியங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 236.9 லட்சம் அந்தியோதயா குடும்பங்களைச் சார்ந்த 939.4 லட்சம் ஏழை மக்களின் உணவு உரிமையை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு சூழ்ச்சி வலையை விரித்துள்ளது. இது மாநிலங்களை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாக்கும். குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவாக சராசரி குடும்ப அளவைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழகத்திலும் 18,64,600 அந்தியோதயா அன்னயோஜனா (AAY)குடும்ப அட்டைகள் மூலம் 69, 26,983 ஏழை எளிய மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு மாதந்தோறும் 65, 261 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கொண்டு வரும் மாற்றத்தின் விளைவாக ஐந்து நபருக்கும் குறைவாக உள்ள 15.75லட்சம் குடும்ப அட்டைகளுக்கான உணவு ஒதுக்கீடு 42,040 மெட்ரிக்டன் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கனவே பயனாளியாக இருந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வறுமையும் அதிகரிக்கும்.இதன் காரணமாக ஏழை, விளிம்பு நிலை கீழ் உள்ள 70 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.
சர்த்தக்-பொது விநியோகம் திட்டம் -நவீன மயமாக்கலும் கேள்விகளும்
பொதுவிநியோக திட்டத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் சர்த்தக்-பி.டி.எஸ்.(SARTHAK-Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation in- PDS) எனும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரையிலான 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்படும் எனவும், இதற்கான நிதியாக ரூ25,530 கோடி ஒதுக்கீடும் செய்து உள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான உணவு தானியங்களின் போக்குவரத்தை எளிதாக்குதல், விநியோக முறையை விரைந்து செயல்படக்கூடியதாக மாற்றுதல், தானியங்கள் கொண்டு செல்லப்படுவதை மேற்பார்வையிடுதல், நியாயவிலைக்கடை செயல்பாடுகளை கண்காணித்தல், இருப்புகளை நிர்வகித்தல் மற்றும் பயனாளிகளின் புகார்களை தீர்த்தல், போலிப் பதிவுகளை நீக்குதல், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களின் நியாய விலை பொருட்களைப் பெறும் வசதியை மேம்படுத்துதல் , ஒருங்கிணைந்த தேசிய பொது விநியோகத்திட்ட தரவு தளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதன்மையாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பரவலாக்கப்பட்ட / மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் விநியோக முறைகளை கொண்டுள்ள மாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படும், பொதுவான மற்றும் சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கு நியாய விலைக்கடை விளிம்புத் தொகைகள் எவ்வாறு மாற்றி அமைக்கப்படும் என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்விக்குறியே!
கார்ப்பரேட் மயமாகும் தானிய கொள்முதலும், சேமிப்பும்
பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய உணவுக் கழகத்தை (FCI) மறு சீரமைக்க இமாசலபிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவிவகித்த திரு. சாந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடிப்படையில் நேரடி கொள்முதலை குறைத்து மாநிலங்களிடம் ஒப்படைப்பது, மாநிலங்களிடம் உள்ள உபரியை மற்ற மாநிலங்களுக்கு நகர்வு செய்வது, பயனாளிகளின் எண்ணிக்கையை 67% லிருந்து 40%ஆக குறைப்பது, பொது விநியோக திட்டத்தை தனியாருக்கு வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதனடிப்படையில் தற்போது உணவு தானிய கொள்முதல், சேமிப்பு, நகர்வு அனைத்தும் அதானி லீப் குழுமத்திற்கு தாரைவார்த்துள்ளது. மொத்தமுள்ள 60 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களில் சுமார் 46.5 லட்சம் மெட்ரிக்டன் தானியங்களை அதானி அக்ரி லாஜிஸ்டிக் லிமிடெட் மற்றும் லீப் இந்தியா ஃபுட் அண்ட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது. ரூ. 16,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 134 தானியக்களஞ்சிய ஒப்பந்தங்களில் மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் மட்டும் 110 ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறும் வகையில் தானியக் கொள்முதலை தனியாருக்கு ஒப்படைத்துள்ளது ஒன்றிய அரசு.
தேசிய காசாக்கும் திட்டத்தின்(National Monetization Pipline) மூலம் நிதி திரட்ட திட்டமிட்டதில், 175 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளும், 35 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சென்ட்ரல் வேர் ஹவுஸிங் கிடங்குகளும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கும், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள 755 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அதானிக்கு தாரை வார்ப்பதன் மூலம் ரூ.28 900 கோடி திரட்ட திட்ட மிடப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகள்- தனியார் மயம்
பொது விநியோக திட்டத்தின் நியாய விலைக்கடைகளை தனியாருக்கு வழங்கும் வகையில், முதல் கட்டமாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்களது மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கடைகள் திறக்க தேவையான இடவசதிகள் செய்து தர வேண்டும். இவர்கள் தனியார் டீலர் என்ற அடிப்படையில்,ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பு அறைகள், சிசிடிவி வசதிகள், கழிவறை, குடிநீர், பாதுகாப்பு அம்சங்கள் இருத்தல் வேண்டும்.தனியார் நியாய விலை கடை டீலர்கள் (Fair Price Shop Dealer) என்ற பெயரில் செயல்படுத்தவும் படிப்படியாக தனியாரிடம் நியாய விலைக்கடைகளை ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் -2013, மற்றும் பொது விநியோக திட்டம் அமலாக்கம் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல் படுத்தப்படுகிறது. 15 ஆண்டுகளில் மக்கள் தொகை உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய மக்கள் புள்ளி விவரங்களுக்கு ஏற்ப பயனாளிகள் தரவுத்தளத்தை புதுப்பித்தல் மற்றும் திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவதற்கு மாறாக மிகவும் ஏழ்மையான மக்களுக்கான உணவு உரிமையை குறைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பிஜேபி முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே வறுமைக் கோட்டிற்கு மேல்(APL) வறுமைக்கோட்டிற்கு கீழ்(BPL) என்பதற்கான வரையறை என்பது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொதுவிநியோகத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் ரூ.0.70 லட்சம் கோடியாக வெட்டி சுருக்கி உள்ளது. மாநிலங்களின் நிதிச் சுமையாக ரூ2.28 லட்சம் கோடியை உயர்த்தி உள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவ வல்லுநர்களும் தற்போது வழங்கும் 35 கிலோ உணவு தானியம் அளவு போதாது என்று கூறி வரும் நிலையில் ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை புறக்கணித்து, பல லட்சம் கோடி வரிச்சலுகைகளை வாரி வழங்கி கார்ப்பரேட் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் மோடி அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை வலுவாக எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து களம் காண்போம். ஒன்றிய பிஜேபி அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரியும், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை உறுதிப்படுத்த கோரியும் ஒன்றிணைந்து போராடுவோம்.
ஆ.கிருஷ்ணமூர்த்தி